
பார்லி அரிசி சமைப்பது எப்படி? அது எதற்கு நல்லது?
பார்லி அரிசி நார்ச்சத்து நிறைந்த உணவு.உடல் ஆரோக்கியத்திற்கும், வலிமைக்கும், உடல் குறைப்புக்கும் உதவும் எளிமையான முறையில் பயன்படுத்தக்கூடிய ஒரு உணவு பார்லி.
இதை கஞ்சி வைத்து சாப்பிடும் போது உடல் எடை குறையும்.உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது பார்லி அரிசி.
பார்லியில் உள்ள வைட்டமின் பி நரம்புகளைப் பலப்படுத்தும்.
கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.
குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் உகந்த உணவாக பார்லி அரிசி உள்ளது.
முக்கியமாக கர்ப்ப காலத்தில் சிலருக்கு கால்களில் வீக்கம் ஏற்படுவது உண்டு.அந்த நேரத்தில் இந்த பார்லி அரிசியை ஒரு கஞ்சி போட்டு கொடுப்பார்கள்.இது சிறுநீரக செயல்பாட்டை ஊக்குவித்து, நீரைவெளியேற்றி, கால் வீக்கம் வடியச் செய்யும். இதிலிருக்கும் ஊட்டச்சத்து உடல் வலிமைக்கு உதவுகிறது.
பார்லி அரிசியின் மாவுப் பகுதியில் நீரில் கரையக்கூடியதும், பிசுபிசுப்புத் தன்மை உடையதுமான ” டெக்ஸ்ட்ரின்” என்னும் சத்துப் பொருளும், சர்க்கரையும் உள்ளது.கஞ்சி தயாரிக்கும் போது இந்த சத்துக்கள் கரைந்து ஊட்டச்சத்தாக மாறுகிறது.
கஞ்சி வைத்து சாப்பிடும் போது, நோயின் காரணமாக ஏற்பட்ட உடல் பலவீனத்தைப் போக்கி, உடல் உறுப்புகளில் ஏற்பட்ட அழற்சியையும் குணப்படுத்தும்.
பார்லியில் உள்ள பீட்டோ குளுக்கான் என்ற நார்ச்சத்து உள்ளது .இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை (எல்.டி.எல்) குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவுகிறது.
கொலஸ்ட்ராலை குறைப்பதால், இதய நோயாளிகளுக்கு பார்லி அரிசி உடல் நலம் காக்க உதவுகிறது.
நம் உடலில் உள்ள நிணநீர் சுரப்பிகள், உடலின் நீர்ச்சத்து பராமரிப்புக்குக் காரணம்.இது அடைக்கப்பட்டார், உடலில் நீர் தேங்கி, வீக்கம் ஏற்படும்.தேங்கிய நீரை வெளியேற்ற பார்லி அரிசியை ஒரு கஞ்சி வைத்து சாப்பிடும் போது உடல் ஆரோக்கியம் பெறும்.
எலும்பு, பற்கள் ஆரோக்கியம்
பார்லி தானியங்களில் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்களோடு கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் காப்பர் சத்துக்களும் அதிகம் இருக்கின்றன. பார்லியை கஞ்சி பதத்தில் செய்து, தினமும் அருந்தி வரும் போது,எலும்புகளும், பற்களும் மிகவும் உறுதி அடைகின்றன. மேலும் வயதானவர்களுக்கு வரும் ஆர்த்தரைடீஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு, மூட்டுகள் தேய்மானம், வலுவிழத்தல் போன்ற குறைபாடுகள் ஏற்படும் சதவீதம் குறைந்து இருப்பதாக மேலை நாட்டு மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பார்லி கஞ்சி
நான் பார்லி அரிசியை இலேசாக வறுத்து பொடி செய்து வைத்துள்ளேன்.தேவைப்படும்போதுஅதில் ஒரு தேக்கரண்டி எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து கொதிக்க விட்டு, கஞ்சி வைத்து ,சாப்பிடும் போது சிறிது மிளகு, சீரகப்பொடி, உப்பு சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
சில நேரங்களில் சப்பாத்தி செய்யும் போது, கோதுமை மாவுடன் ஒரு தேக்கரண்டி கலந்து மாவை பிசைந்து சப்பாத்தி செய்வதுமுண்டு.
பார்லி சூப்
பார்லி அரிசியில் சூப் வைத்தும் சாப்பிடலாம்.
சூப்பில் போடும் கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளுடன், பூண்டு பற்கள் சில போட்டு ஒரு தேக்கரண்டி பார்லியோடு இந்த சூப் தயார் செய்யலாம்.
முதலில் பார்லியை 3 டம்ளர் தண்ணீர் வைத்து வேகவிடவும்.அரை வேக்காடு வந்ததும் , காய்கறிகள், பூண்டு பற்கள் போட்டு வேகவிட்டு , மிளகுத்தூள், உப்பு சேர்த்து, சிறிது பாலும் கலந்து கொண்டால், அருமையான பார்லி சூப் தயார்.