
அரிசி கழுவிய நீரின் நன்மைகள்
பொதுவாக அரிசி கழுவி நீரை கீழே கொட்டி விடுவோம் .அதற்கு பதிலாக அதை நாம் பயன்படுத்தும் போது நம் சருமம், கூந்தல் ஆகியவை எவ்வளவு ஆரோக்கியம் பெறுகின்றன என்பதை யாரும் அறிவதில்லை.
இந்த நீரில் கார்போஹைட்ரேட்டுகள், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள், தாதுக்கள், வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன.
அரிசியை சுத்தமான நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து, அந்த நீரை வடிகட்டி சேகரித்து ,அந்நீரால் முகம் மற்றும் கூந்தலை பராமரிக்கலாம்.
இந்த நீரை சூடு பண்ணி, அதைக் கொண்டு குழந்தைகளின் கால்களை மீது ஊற்றி வந்தால் கால்களுக்கு பலம் கிடைக்கும் .உடல் முழுவதும் குளிக்க வைக்கலாம்.இதனால் உடலுக்குத் தேவையான பலமும் கிடைக்கும். .இவை இன்றும் கிராமப்புறங்களில் பின்பற்றி வரப்படுகிறது. மூன்று வயது வரை கால்களில் பலமின்றி நடக்காது இருந்த என் தம்பிக்கு அரிசி கழுவிய நீரை சூடு பண்ணி கால்களில் ஊற்றிவிட்டதாக என் தாயார் அடிக்கடி கூறுவார்.
அரிசி கழுவிய நேரில் உள்ள சத்துக்கள் சரும துளைகளின் வழியே சருமச் செல்களுக்கு கிடைத்து, சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவோடவும் இருக்க உதவுகிறது. மேலும் அழகை அதிகரிக்க மட்டும் இல்லாது, இதனை குடிக்கும் பொழுது அதில் இருக்கும் கார்போஹைட்ரேட்களும் மற்ற ஊட்டச்சத்துக்களும் உடலுக்கு ஆற்றலை தருகின்றன.
ஊற வைத்த அரிசியை கைகளால் நன்கு அழுத்தி கழுவும் போது, நம் கைகளில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் அரிசி நீருடன் சேர்ந்து வினைபுரிந்து கூடுதல் பலன்களை கொடுக்கும்.
தலைக்கு ஷாம்பு பயன்படுத்தி குளித்த பின்பு ,அரிசி நீரில் கூந்தலை அலச வேண்டும் .இவ்வாறு பதினைந்து நிமிடங்கள் வேர் முதல் நுனிவரை மென்மையாக தலையில் மசாஜ் செய்து ,சாதாரண நீரில் கழுவ வேண்டும். இதனால் முடிக்கு வலிமையும் ,இயற்கையான பொலிவும், கிடைக்கும். முடி உதிர்வு கட்டுப்படும். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இவ்வாறு செய்யலாம் . இன்றும் எங்கள் வீட்டில் அரிசி கழுவிய மற்றும் வடித்த நீரைப் பயன்படுத்தி, தலைக்கு குளிக்கும் பழக்கம் உள்ளது.
சருமத்திற்கு பயன்படுத்தும் போது செல்கள் புத்துணர்ச்சி பெற்று பொலிவு அதிகரிக்கிறது. இதில் உள்ள மாவுச்சத்து, வெடிப்பு ,முகப்பரு, தோல் அலர்ஜி போன்றவற்றை நீக்க உதவுகிறது .தூய்மையான பருத்தி துணியை அரிசி நீரில் நனைத்து அதை முகத்தின் மீது சிறிது நேரம் மென்மையாக துடைத்தால் சருமத் துளைகள் இறுகி மேனி செம்மையாகும். அரிசி நீரில் உள்ள துவர்ப்பு தன்மை, எண்ணெய் பசையை குறைத்து, முகப்பருவை தடுக்கிறது.
தேங்காய் எண்ணெய், ஜோஜோபா எண்ணெய், ரோஸ் எண்ணெய் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் சிறிது அரிசி நீரை கலந்து தடவும் போது, சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கி இளமை பொலிவு அதிகரிக்கும்.